

சென்னை: பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 14 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது.
துணை வேந்தர் நியமனத்தில் அரசுக்கும் வேந்தரான ஆளுநருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த சூழலில், முதல்வர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் ஆளுநர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் நீண்ட காலமாக துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவது கால தாமதமாகி வருகிறது.
அதோடு பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தாங்கள் நேரடியாக தலையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
துணை வேந்தர் இல்லாத காரணத்தால் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள துணை வேந்தர் ஒருங்கிணைப்புக் குழுவால் நிர்வாக முடிவுகளைச் சரியாக எடுக்க முடியாத சூழல் உள்ளது.
இந்த தற்காலிக நடவடிக்கையால் பல்கலைக்கழகங்களில் நிர்வாக, கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்குச் சரியாக தீர்வு காண முடியவில்லை. எனவே, பல்கலைக்கழகங்களின் நிர்வாகம், கல்விப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களுக்கும் யுஜிசி விதிமுறைகளுக்கும் உட்பட்டு முழு நேர துணை வேந்தர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அதேநேரத்தில் எந்தெந்த பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட வேண்டுமோ அதுதொடர்பாக ஒரு கால அட்டவணை தயார் செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
துணை வேந்தர் தேர்வுக் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்ப்பதுதான் துணை வேந்தர் நியமனத்தில் தலையாய பிரச்சினையாக உள்ளது.
துணை வேந்தர் தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதி, யுஜிசி தலைவரின் பிரதிநிதி, அரசு பிரதிநிதி என 4 பேர் இடம்பெறலாம். இந்த பிரதிநிதிகள் தலைசிறந்த கல்வியாளர்களாகவும், நிபுணர்களாகவும் இருக்க வேண்டும்.
துணை வேந்தர் பதவி முடிவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே புதிய துணை வேந்தரை தேர்வுசெய்வதற்கான பணிகளைத் தேடுதல் குழு தொடங்கிவிட வேண்டும்.
தேடுதல் குழு நியமிக்கப்பட்ட 15 நாட்களில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 மாதங்களுக்குள் பரிசீலனை, நேர்காணல் என அனைத்து தேர்வு பணிகளையும் முடித்துவிட வேண்டும். தேடுதல் குழு ஒருமனதாகத் தகுதியான 3 பேரை வரிசை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கு அரசு மற்றும் வேந்தர் இருதரப்பின் கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்பு வாயிலாக சட்டப்பூர்வமாக தீர்வு காணப்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனவே, முதல்வர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நான் முன்வைத்துள்ள துணை வேந்தர் தேர்வு முறை நடைமுறையை மேற்கொண்டு பட்டம் பெற காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நலனையும், பல்கலைக்கழகங்களின் நலனையும் கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைவாக நடத்த உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் கூறியுள்ளார்.