

சென்னை: ஆவடி விமானப்படை நிலையத்தைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு படையின் (என்எஸ்ஜி) 27-வது சிறப்பு ஒருங்கிணைந்த குழுவினருக்கு பாராட்டு விழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கலந்துகொண்டு என்எஸ்ஜி வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து ஆளுநர் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்புக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் என்எஸ்ஜி வீரர்களின் சிறந்த சேவையை பாராட்டுகிறேன்.
உங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த அங்கீகாரத்தை ஆளுநராகிய நான் வழங்கவில்லை. ஒட்டுமொத்த தேசம் வழங்கியதாக கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இயற்கைச் சீற்றங்களின்போதும், எதிர்பாரா விபத்துகள் நேரும்போதும் நீங்கள் ஆற்றும் மகத்தான பணிகளையும் சாதனைகளையும் எண்ணி மக்கள் பெருமைப்படுகிறார்கள். இக்கட்டமான நேரங்களில் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர்கள் என்எஸ்ஜி படையினர்தான்.
விபத்து நேரங்களில் உங்களின் உடனடி வருகை பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தன்னம்பிக்கையும் அளிக்கிறது.
என்எஸ்ஜி பயிற்சி முகாம்கள் மற்றும் ராணுவ முகாம்களுக்கு நான் செல்லும்போது பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பும், கடமையுணர்வும் என்னை வியக்க வைக்கும்.
ராணுவத்தினர், என்எஸ்ஜி உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் தியாகத்தினாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் நாட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். அவர்கள் எவ்வித பயமும் இல்லாமல் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு ஆளுநர் கூறினார்.