

சென்னை: குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நவம்பர் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித் தண்டலர் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியிட்டது.
ஆன்லைன் விண்ணப்ப பதிவும் அன்றைய தினமே தொடங்கியது. இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன்(நவ.5) நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசத்தை நவம்பர் 8-ம் தேதி வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
எனவே, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளம் (www.tnpsc.gov.in) வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரூப்-4 எழுத்துத்தேர்வு 2027 ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.