

சென்னை: மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: “நான் உனக்கு பல விஷயங்களை போதித்திருக்கலாம். அது சரியா தவறா என்று பகுத்தாய்ந்து அதை நீ ஏற்கலாம்; இல்லை நிராகரிக்கலாம். அதற்கு உனக்கு முழு உரிமை உண்டு” என்று பகுத்தறிவைப் போதித்தவர் மகாவீரர்.
அகிம்சை, உண்மையை கடைபிடிக்கும் கோட்பாடு, பற்றின்மை என்ற முப்பெரும் பாதையில் செல்வோர் இப்பிறவிப் பிணியான பிறப்பு இறப்பிலிருந்து விடுபட்டு தெய்வமாக முடியும் என்று வாழ்ந்து காட்டியவர். அவரது வழியில் சமண தர்மத்தை பின்பற்றும், உலகெங்கிலும் வாழும் சகோதர சகோதரிகளுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் வளர்க்கப்பட்ட வெறுப்பு, கசப்பு உணர்வுகளை வீழ்த்துவதற்கு நம்மிடையே இருக்கிற மிகச் சிறந்த சித்தாந்தங்களில் ஒன்று மகாவீரர் வழங்கிய போதனைகள்.
அந்த போதனைகள்தான் இன்றைக்கு இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கப் பெரிதும் உதவும். அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்நாளில், தமிழகத்தில் அவரது போதனைகளைப் பின்பற்றி வாழும் சமண சமுதாய மக்கள் அனைவருக்கும் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி: துறவறத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மகாவீரரின் பிறந்தநாளை கொண்டாடும் சமண மக்கள் அனைவருக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; மனிதர்கள் பின்பற்ற வேண்டிய பாடம். எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து காட்டிய மகாவீரரின் வாழ்க்கையை மனிதகுலம் முழுமையும் கடைபிடித்தால் உலகம் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறும். மகாவீரர் பிறந்தநாளில், அவர் விரும்பிய மது இல்லாத உலகம், அன்பு நிறைந்த மக்களை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மகாவீர் ஜெயந்தி தினத்தில் மகாவீரின் போதனைகளை நினைவுகூர்ந்து, அவரது போதனைகளான அகிம்சை, சத்தியம், இரக்கம் மற்றும் நேர்மை ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்வோம்.
வன்முறையற்ற வாழ்க்கை முறையை ஊக்குவிப்போம். தீவினையைத் தவிர்க்கவும், தர்மம் வாழவும், நல்லெண்ணம் ஓங்கவும், நல்லவை பேசி மகாவீரரின் புகழை பாடுவோம். இவ்வாறு வாழ்த்து தெரி வித்துள்ளனர்.