

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் கார்பன் கிரெடிட் திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.50 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் இருந்து கார்பன் கிரெடிட்டுகளை உருவாக்கும் பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் துறைமுகம் 5 முக்கியமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது. இத்திட்டங்களின் மொத்த மின்சார உற்பத்தி திறன் 12.4 மெகாவாட் ஆகும்.
இந்த திட்டத் தொகுப்பில் 400 கிலோவாட் மேற்கூரை சூரியமின் ஆற்றல் அமைப்பு, அதனுடன் 1 மெகாவாட் மற்றும் 2 மெகாவாட் தரைத்தள சூரிய மின்நிலையங்கள், மேலும் 6.3 மெகாவாட் மற்றும் 2.7 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் திட்டங்களும் அடங்குகின்றன.
அடுத்த பத்து ஆண்டுகளில், இந்த திட்டங்கள் மூலம் சுமார் 19,483 கார்பன் கிரெடிட்கள் உருவாகும் என்று கணிக்கப்படுகிறது. இந்த கார்பன் கிரெடிட்கள் மூலம் தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் வஉசி துறைமுகம் சுமார் ரூ.50 கோடி வருவாய் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் உலகளாவிய கார்பன் சந்தைகளை திறமையாக பயன்படுத்தி, நிலைத்தன்மை முதலீடுகளில் உள்ள அபாயத்தை குறைத்து, அதன்மூலம் லாபம் பெறும் துறைமுகமாக விளங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.