“பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆவணப்படுத்த அரசு நடவடிக்கை” - அமைச்சர் அருண்ராஜ் தகவல்

“பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆவணப்படுத்த அரசு நடவடிக்கை” - அமைச்சர் அருண்ராஜ் தகவல்
Updated on: 
2 min read

திருநெல்வேலி: தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆவணப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், காரையாறு - சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு பகுதியில் சுகாதாரத் துறையின் சார்பில் பழங்குடியினருக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்து மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, இந்த காணிக்குடியிருப்பு பகுதியில் உள்ள 3 கிராமங்களில் வசிக்கும் 144 குடும்பங்களின் மருத்துவ தேவைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள், மருத்துவ கட்டமைப்புகள், நடமாடும் மருத்துவ குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் முறையாகக் கிடைக்கின்றனவா என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக, அப்பகுதியில் இரவு தங்கி, மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தோம்.

சின்ன மயிலாறு பகுதியில் குடும்பம் குடும்பமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய சித்த மருத்துவ முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, மூலிகை குளியல் சிகிச்சை முறையை பார்வையிட்டு, மூலிகை குளியல் மேற்கொண்டு அதன் சிறப்புகள் குறித்து நேரடியாக பார்வையிட்டோம்.

நமது முன்னோர்கள் வழிவழியாக பின்பற்றி வரும் பாரம்பரிய மருத்துவ அறிவு மற்றும் சிகிச்சை முறைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும். எனவே, இப்பகுதியில் பின்பற்றப்படும் பாரம்பரிய மருத்துவ முறைகளை முறையாக ஆவணப்படுத்துவதற்காக, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையின் தொடர்புடைய அலுவலர்களை கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பதும், ஆம்புலன்ஸ் வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மருத்துவச் சேவைகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் பாம்புக்கடி, மாரடைப்பு உள்ளிட்ட அவசர மருத்துவச் சூழல்கள் ஏற்படும்போது, பொதுமக்கள் உரிய சிகிச்சையை பெறுவதில் சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இத்தகைய அவசர மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த மருத்துவமனையில் எந்த வகையான சிகிச்சைகள் கிடைக்கும் என்பதை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், செயலி மூலம் மருத்துவச் சேவைகள் குறித்த தகவல்களை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மேலணை - பாபநாசம் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடி, கண்ணொளி பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் 8 குழந்தைகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஷ் அகமது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், மாவட்ட சுகாதார அலுவலர் முரளி சங்கர், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆவணப்படுத்த அரசு நடவடிக்கை” - அமைச்சர் அருண்ராஜ் தகவல்
“தவெக இப்போது ‘பிரேக்கிங் பேட்’ பார்ட்டி” - ‘மெத்’ கடத்தல் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in