

சென்னை: தமிழகத்தில் மாணவர்களின் மனநலம் பாதுகாப்பு, தற்கொலை தடுப்புக்கு புதிய கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மாணவர்களின் உளவியல் பாதிப்புகளுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இதில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, சட்டத் துறை, உள்துறை அதிகாரிகள், மனநல நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த மாதம் இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சில வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய மனநலக் கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்களின் மன அழுத்தத்தைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாக்கத் தேவையான வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள மனநலக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள், ஆலோசனை மையங்கள் மூலம் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதுடன், நண்பர்கள் இடையே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளும் நல்லாதரவு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். இளைஞர் மன்றங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மனநல ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்கள் ‘14416’, ‘14417’, ‘104’, ‘1098’, ‘181’ ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். தீவிர மனநல பாதிப்பு உள்ள மாணவர்களை அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், பெற்றோர், ஆலோசகர்கள், சக மாணவர்கள் என அனைவரது பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.