

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பல் மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று, முதல்வர் விஜய்க்கு, அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்த நாள் வரும் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவருக்கு சமூக வலைதளங்களில் அரசு மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தவெக என்னும் கட்சியை தொடங்கி, இரண்டரை வருடங்களில் தமிழகத்தில் ஆட்சியையே பிடித்து, மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என பல திட்டங்களையும், கனவுகளையும் முதல்வர் மனதில் வைத்துள்ளார்.
பொதுவாக, ஒரு நாட்டின் எதிர்காலத்துக்கு கல்வியும், சுகாதாரமும் அடிப்படை. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் கல்வியும், சுகாதாரமும் அரசின் இரு கண்கள் என முழங்கி கொண்டே, அரசு மருத்துவர்களை கண்கலங்க வைத்தார்கள். திமுக அரசு, மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அதன் ஆட்சிக்காலம் முழுவதுமே நிறைவேற்றாமல் நம்பிக்கை துரோகம் செய்தது. அதனால், 2026 தேர்தலில் 100 சதவீதம் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என ஒவ்வொரு மருத்துவரும் உறுதிமொழி எடுத்தனர்.
மாற்றத்தை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டும் முதல்வர், உயிர்காக்கும் துறையான சுகாதாரத் துறையில் இருந்து அதை தொடங்க வேண்டும். முதல்வர் தனது பிறந்த நாள் பரிசாக, அரசாணை 354-ன் படி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பல் மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மக்களுக்கு மருத்துவ சேவை சிறப்பாகவும், எளிதாகவும் கிடைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.