

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஞானசேகர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகருக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனிடையே, ஞானசேகரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் கங்காதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது ஞானசேகர் தற்போது சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.