

சென்னை: நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரை சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர். பல்வேறு குற்ற வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குகளில் விசாரணை நடை பெற்று வருகிறது.
வழக்கு விசாரணையில் ஆஜராக இளைஞர் ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர், வழக்கில் ஆஜராகிவிட்டு, வெளியே வந்து கானா பாடல் பாடி அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து, சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. உரிய விசாரணை நடத்த போலீஸாருக்கு ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
அதன்படி, சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக வீடியோ பதிவிட்ட இளைஞரை அடையாளம் கண்டு கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.