

கும்பகோணம்: மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கும்பகோணம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ஜிகே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் வேட்பாளர் அசோக் குமாருக்கு தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: கோயில் நகரமான கும்பகோணத்தில் கோயிலுக்கு செல்லாதவர், அந்தப் பக்கம் பார்க்காதவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தீர்கள். இந்த நிலை மாற வேண்டும்.
பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக மாற்றுவார், அதற்கு ஏற்றவாறே அவருடைய பணிகள் இருக்கின்றன. இந்தியா இன்றைக்கு பாதுகாப்பான நாடாக இருக்கின்றது என்றால், அதற்கு பாஜக தான் காரணம். மத்தியில் இன்றைக்கு மக்களாட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் விரோத திமுக அரசு, வாக்கு வங்கிக்காக மத்திய அரசினுடைய திட்டங்களைப் பெறாமல், தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறது திமுக அரசு.
மத்திய பாஜக அரசை, திமுக அரசு எதிர்க்கட்சியாகப் பார்க்கவில்லை, எதிரிக் கட்சியாகப் பார்க்கிறது. அதன் அடிப்படையிலேயே இன்றைக்கு பல துறைகளிலே தமிழகம் வளரவில்லை, உயரவில்லை, சிறக்கவில்லை. மத்திய அரசினுடைய திட்டங்களை எல்லாம், திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறது. மகளிருக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்றால் அது தமிழகம் தான். ஒவ்வொரு தனி மனிதனும் தமிழனும் தலைகுனிய வேண்டிய விஷயம் இது. இதற்கு காரணம் திமுக அரசு.
தமிழகத்தில் சட்டவிரோதச் செயல்கள், டாஸ்மாக் போதை கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதை, கட்டுப்படுத்தத் தவறியதற்குக் காரணம், திமுக அரசின் நிர்வாகத் திறமை இல்லாததே காரணம். முன்னாள் முதல்வர் பழனிசாமி, ஆட்சியில் தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. அந்த அமைதியான சூழல் மீண்டும் தமிழகத்திற்குத் திரும்ப வேண்டும். தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கவும், அமைதி நிலை நாட்டப்படவும் ஒரு வலுவான அரசியல் கூட்டணி அவசியமாகிறது. மத்திய- மாநில அரசுகளின் இணக்கம் தேவை. அதாவது டபுள் இன்ஜின் சர்க்கார்.
தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவெடுக்க வேண்டுமானால், மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடைய, பிரதமர் மோடி, பழனிசாமி ஆகியோரின் கரங்கள் வலுப்பட வேண்டும். அப்போது தான் காமராஜரின் பொற்கால ஆட்சி மீண்டும் மலரும்.
தற்போதைய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கும்பகோணம் குப்பை நகரமாக' மாறியுள்ளது கவலையை அளிக்கிறது. ஆன்மிக நம்பிக்கையற்றவர்களுக்கும், நகரத்தைப் பேணிப் பாதுகாக்கத் தவறியவர்களுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே கொண்டு செல்வதை இந்தக் கூட்டணி அனுமதிக்காது. பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், கும்பகோணத்தை தனி மாவட்டமாக தரம் உயர்த்துவதே முதல் முக்கியப் பணியாக இருக்கும். இது இந்த நகருக்கு வழங்கப்பட வேண்டிய உரிய கவுரமாகும்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.