தனித் தொகுதி விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தனித் தொகுதி விவகாரம்:
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம், பௌத்த மதங்களை பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே போட்டியிட அனுமதிக்கக் கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், வேட்பு மனு பரிசீலனை செய்ய எந்த வித தடையும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதிகளாக உள்ளன. பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம், பௌத்தம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் மனு தாக்கல் செய்திருந்தார்.

தற்போது 44 தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவிகிதத்தினர் இந்து, சீக்கியம், பௌத்தம் மதத்தை பின்பற்றாதவர்கள் என்றும், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.

அதனால் வேட்பு மனு பரிசீலனையின் போது அரசியல் சாசனம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டுமென அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன் ஆஜராகி, இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் மதத்தை பின்பற்றுபவர்களையே பட்டியல் இனத்தவர் என்று இந்திய அரசியல் சாசனம் தெரிவித்தது. இதையே உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளதாகவும், வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று மட்டுமே நடைபெறுவதால் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், பட்டியல் இனத்தவர் என்ற சான்று உண்மையானதா போலியானதா என்பதை மட்டுமே ஆய்வு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து அதை தாக்கல் செய்தார். அந்த சான்று சரியாக இல்லாவிட்டால் மட்டுமே வேட்பு மனு நிராகரிக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுதினத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வேட்பு மனு பரிசீலனை செய்ய எந்த வித தடையும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

தனித் தொகுதி விவகாரம்:
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
“டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது” - உதயநிதி விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in