

தமாகா கட்சியின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக்கூட கர்நாடகா மதிப்பதில்லை. இந்த விவகாரத்தில் தவெக அரசு உச்சநீதிமன்றத்தை நாடுவது சரியான முடிவுதான்.
மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக உரிமைகளை விட்டுத்தரக் கூடாது. இந்த விவகாரம்தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை தவெக அரசுகூட்டியிருப்பது பாராட்டத்தக் கது.
சில கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது ஏற்புடையதல்ல. முதல்வர் விஜய்யின் இரண்டரை மாத ஆட்சி என்பது, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நூல்வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் தலைவர்களுடன் நானும் பங்கேற்றேன். அந்த மேடை, வரும் காலங்களில் வளமான தமிழகம், வலிமையான பாரதத்தை அமைப்பதற்கு ஏற்ற மேடையாக இருந்தது.
60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. தமிழக மக்களின் நலன் கருதிகாங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தமாகா செயல்பட தொடங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.