“4 மண்டலத்திலும் தமாகா போட்டி” - சூசகமாக சொன்ன ஜி.கே.வாசன்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

தமிழக சட்டப் பேரவையில் 4 மண்டலங்களில் இருந்தும் தமாகா-வின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு ஏற்ப எங்கள் வியூகங்கள் அமையும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கோவை மண்டல தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்வில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இதுகுறித்து கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. இதற்கு திமுக அரசின் மக்கள் விரோத போக்குதான் காரணம்.

ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக, தற்போது பொய் வாக்குறுதிகளை கொடுப்பதை மக்கள் ஏற்கவில்லை. தென் மாநிலங்களில், தமிழகத்தில்தான் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. திமுக அரசால் இதனை கட்டுப்படுத்த முடியாதது வெட்கக்கேடானது.

எங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து வலுப்பெறும். அதன் பின்னர், கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை, தொகுதிகள், வேட்பாளர்கள், அறிவிப்பு இருக்கும். தமிழக சட்டப் பேரவையில் 4 மண்டலங்களில் இருந்தும் தமாகாவின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு ஏற்ப எங்கள் வியூகங்கள் அமையும்.

மகளிருக்கு உரிமைத் தொகை கொடுப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை. மகளிருக்கு ரூ.2000 வீதம் உரிமைத் தொகை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு திட்டங்களுக்கு நிதி இல்லை எனச் சொல்லிய திமுக, மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் கொடுத்து நூதனமாக ஏமாற்றப் பார்க்கிறது. பணம் ஒரு கையில் கொடுத்தால், மறு கையில் டாஸ்மாக் சென்று விடுகிறது. திமுக-வின் உள்நோக்கத்தை வாக்காளர்கள் புரிந்து கொள்வார்கள்.

தவெக கூட்டத்தில் உயிரிழப்பு தொடர்கிறது. அதற்கான முழு பொறுப்பையும் அரசும், கூட்டம் நடத்திய கட்சியும் தான் ஏற்க வேண்டும். வரும் நாட்களில் இது போன்ற நிலை இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ராஜகண்ணப்பனுக்கு காங்கிரஸ் பதிலடி: திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in