

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
அதிமுக தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதற்காக, நேற்று டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் பியூஷ் கோயலை சந்தித்த, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பேசினார்.
பின்னர், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில், பாஜக 27, பாமக 18, அமமுக 11 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜி.கே.வாசன் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், அந்த நிகழ்வில் அவர் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இதுதொடர்பாக தமாகா மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “ தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமாகா சந்தித்தது. அந்த தேர்தலில் தமாகா 6 இடங்களில் போட்டியிட்டது. அடுத்து 2024-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 3 இடங்களில் தமாகா நின்றது.
தமிழகத்தில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமாகாவுக்கு 8 இடங்கள் கேட்கப்பட்டது. அதற்காக தான் மாநிலங்களவை எம்.பி. பதவி வேண்டாம் என்று தெரிவித்தோம். ஆனால், 4 தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக தெரிவித்தனர். கடைசியாக 6 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டோம்.
ஆனால், அவர்கள் அதே 4 தொகுதிகளில் இருக்கின்றனர். அதனால் தான் தொகுதி பங்கீடு நிகழ்வில் வாசன் பங்கேற்கவில்லை. 6 தொகுதிகளுக்கு குறைவாக பெற்று கொள்ள மாட்டோம். நாங்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவோம்” என்றனர்.