

கோப்புப் படம்
மாநிலங்களவை எம்.பி. பதவி வேண்டாம். சட்டப்பேரவை தேர்தலில் 8 தொகுதிகள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் தமாகா உறுதியாக கேட்டுள்ளது.
தமிழகத்தின் மாநிலங்களவை எம்.பி.க்களான கனிமொழி என்.வி.என்.சோமு (திமுக), திருச்சி சிவா (திமுக), என்.ஆர்.இளங்கோ (திமுக), அந்தியூர் செல்வராஜ் (திமுக), தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது. புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் முன்னதாகவே நடைபெறவுள்ளது. இந்த 6 எம்.பி.க்களில் 4 பேரை திமுகவும், 2 பேரை அதிமுகவும் தேர்தெடுக்கவுள்ளது.
அதிமுக சார்பில் கடந்த முறை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசன் மாநிலங்களவை எம்.பி. பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமாகா மூத்த தலைவர்களிடம் கேட்ட போது, “தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமாகா சந்தித்தது. அந்த தேர்தலில் தமாகா 6 இடங்களில் போட்டியிட்டது. அடுத்து 2024-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 3 இடங்களில் தமாகா நின்றது. தமிழகத்தில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமாகாவுக்கு 12 தொகுதிகளை கேட்டு, 15 தொகுதிகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குறைந்தது 8 இடங்களை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதனால் தான் மாநிலங்களவை எம்.பி. பதவி வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறோம்” என்றனர்.