“பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்” - ஜி.கே.வாசன் தகவல்

தமாகா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே. வாசன்

தமாகா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே. வாசன்

Updated on
2 min read

தமாகா சார்பில் 5 தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா-வுக்கு ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 5 தொகுதிகளில் பாஜக-வின் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நண்பகல் 12.12 மணிக்கு அறிவித்தார்.

அதன்படி, ஒட்டன்சத்திரம் - விடியல் எஸ்.சேகர் (மாநில துணைத் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ), கும்பகோணம் - எம்.கே.ஆர்.அசோக்குமார் (மாநிலச் செயலாளர்), ராணிப்பேட்டை - வி.எம்.கார்த்திகேயன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத் தலைவர்), கிள்ளியூர் - டாக்டர் ஜே.நிவின் சைமன் (தென்மண்டல இளைஞர் அணி துணை தலைவர்), ஈரோடு மேற்கு - எம்.யுவராஜா (மாநில பொதுச் செயலாளர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் அறிவிப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறியதாவது: தமாகா வேட்பாளர்கள் பட்டியலை நண்பகல் 12.12 மணிக்கு வெளியிடுகிறேன். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் கட்சிக்கு உள்ள நம்பிக்கையை நாங்கள் பின்பற்றுகிறோம். அது நூற்றுக்கு நூறு நல்ல நேரம் என்று நான் நம்புகிறேன்.

2019 மக்களவை தேர்தலில் நான் அதிமுக கூட்டணியில் நேரடியாக போட்டியிட்டேன். எனக்கு ஒரு மக்களவை தொகுதியும், பின்னர் ஒரு மாநிலங்களவை எம்பி பதவியும் வழங்கப்பட்டது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அந்த கூட்டணி தொடர்ந்தது. தேர்தல் நெருங்கும் போது எங்களுக்குக் கிடைக்க வேண்டிய சைக்கிள் சின்னம் இன்றைக்குப் போல அன்றைக்கும் கிடைக்கவில்லை. அதனால், நான் அப்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டேன். அதுதான் கூட்டணி நியாயம்.

அதன் பிறகு, எங்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார்கள். வழக்குத் தொடர்ந்தார்கள். கடந்த மக்களவை தேர்தலின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் 3 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிட்டோம்.

இந்த முறை, மீண்டும் சைக்கிள் சின்னத்தை வழங்க முடியாத சூழல் குறித்து தேர்தல் ஆணையம் கூறியது. இந்த முறை சைக்கிள் சின்னம் கிடைக்காததால் நாங்கள், கூட்டணியில் உள்ள பாஜக-வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இதுதான் உண்மை நிலை ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கை வெளியீடு: முன்னதாக, ஜி.கே.வாசன் வெளியிட்ட தமாகா-வின் தேர்தல் அறிக்கையில், ‘பொது வாழ்வில் நேர்மை, தனிவாழ்வில் எளிமை, ஆட்சி அதிகாரத்தில் தூய்மை, வெளிப்படையான நிர்வாகம் மத்திய அரசுடன் இணக்கமான போக்கு எங்களின் தாரக மந்திரம்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு, விவசாயியே விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெற்று தருவோம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

<div class="paragraphs"><p><em><strong>தமாகா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே. வாசன்</strong></em></p></div>
காங்கிரஸின் ‘நட்பு போட்டி’ - புதுச்சேரியில் சிதறியது இண்டியா கூட்டணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in