

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
ஆட்சியில் இருந்தபோது குடிமராமத்து பணிகளைச் செய்ததற்காகவே அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமானில் அதிமுக வேட்பாளர் ஆர்.காமராஜுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் நேற்று வாக்கு சேகரித்து பேசியது: அதிமுக ஆட்சியில் இருந்தபோது குடிமராமத்து பணிக்கு அடித்தளமாகச் செயல்பட்டவர் அப்போதைய முதல்வர் பழனிசாமி. அவருக்கு துணை நின்றவர் ஆர்.காமராஜ். இதைவிட விவசாயிகளுக்கு வேறு உகந்த பணியை யாரும் செய்ய முடியாது. இதற்காகவே விவசாயிகள் அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்நிலையில், விவசாய பணியின்போது இடி, மின்னல் தாக்கியோ, விஷ ஜந்துக்கள் கடித்தோ, வன விலங்குகளால் தாக்கப்பட்டோ விவசாயி உயிரிழந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பழனிசாமி அறிவி்த்துள்ளார். மத்திய அரசுடன், தமிழக அரசு இணக்கமாக இல்லாததாலேயே கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் வளர்ச்சி இல்லை. மத்திய அரசு கொடுத்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஊழல் நடைபெற்றுள்ளது. மேலும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.