"தமிழகத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் காங். வெற்றி பெறும்": கிரிஷ் சோடங்கர்

"தமிழகத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் காங். வெற்றி பெறும்": கிரிஷ் சோடங்கர்
Updated on
2 min read

ஊட்டி: இந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.நாகராஜ் தலைமை வகித்தார். தெலங்கானா அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு ஆகியோர் இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊட்டி வேடப்பாளர் பி.ராமசந்திரனை அறிமுகம் செய்து வைத்து பேசினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ராகுல் மீது மக்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். எங்கள் ஆய்வுகளின்படி ஊட்டி தொகுதியிலும் நாங்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். ஊட்டியில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவோம்.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம். சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் உட்பட பொது வசதிகளை மேம்படுத்துவோம். பாஜக ஒரு விஷ கிருமி. எனவே, தமிழக மக்கள் பாஜகவின் வருகையை நிராகரிப்பார்கள். தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை. காங்கிரஸ், திமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் ஒற்றுமையாகப் பணியாற்றி வருகின்றனர்.

தி.மு.க மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதற்கு நாங்கள் அனைவரும் ஆதரவளிக்கிறோம். ராகுல் காந்தியைப் பிரதமராகவும், ஸ்டாலினை முதல்வராகவும், ராமச்சந்திரனை இங்கு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக்குவதற்கு நாங்கள் அனைவரும் உழைக்கிறோம்.

பெண்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை மாதம் ரூ.2,000 ஆக உயர்த்துவோம். இண்டியா கூட்டணி அரசு மற்றும் திமுக அரசு அமைந்தவுடன், 300 நாட்களில் 3 லட்சம் அரசு வேலை காலிப்பணியிடங்களை நிரப்புவோம். 10,000 பெண் காவலர்களைத் தேர்வு செய்யச் சிறப்பு நடவடிக்கை எடுப்போம்.

தமிழகத்தில் முதல்முறையாக இணைந்துள்ள 21 அரசியல் கட்சிகளின் தொண்டர்களின் ஆதரவுடன் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மற்ற மாநிலங்களை பாஜக அழித்தது போலத் தமிழகம் அழிந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. பாஜக என்ற விஷம் தமிழகத்திற்குள் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் திமுகவின் கீழ் ஒன்றுபட்டுள்ளனர்.

எங்களது தேசியத் தலைவர்கள் அனைவரும் அடுத்த வாரம் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். காங்கிரஸ் தலைவர் கார்கே ஒன்று அல்லது இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்வார். ராகுல் இரண்டு முதல் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்வார். பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பிரச்சாரம் செய்வார். கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரும் பிரச்சாரம் செய்வார்கள்.

தெலங்கானா முதல்வர் மற்றும் துணை முதல்வர், அமைச்சர் ஏற்கனவே சுற்றுப்பயணத்தில் உள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல தேசியத் தலைவர்கள் கடைசி சில நாட்களில் தமிழகத்தில் உள்ள 234 வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்வார்கள். எங்களது கட்சியில் இருந்த ஒரு சிலர் த.வெ.க-வுடன் கூட்டணி வைக்க விரும்பினர், நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்த பிறகு, அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு அங்கே சேர்ந்துவிட்டனர். அவ்வளவுதான். மற்றபடி கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்.

நான் கோவாவிலிருந்து வருகிறேன். மூன்று சிலிண்டர் வாக்குறுதியை 2022 கோவா சட்டமன்றத் தேர்தலின் போது அவர்கள் அளித்தனர். இப்போது கோவாவிலும் பாஜக ஆட்சி தான், மத்தியிலும் பாஜக ஆட்சி தான். இப்போது நாம் 2026-ல் இருக்கிறோம். கோவாவில் எத்தனை சிலிண்டர்களை விநியோகித்தார்கள். கோவாவில் மட்டுமல்ல, உத்தரகாண்டிலும் இதை அறிவித்தார்கள். எனவே, தேர்தல் நடக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் பொய்களை விற்கிறார்கள். காங்கிரஸ் பொய் சொல்லாது.

முதலில் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். நரேந்திர மோடி ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் போடப்படும் என்றார். கருப்பு பணம் திரும்ப வரும் எனப் பெரிய வாக்குறுதிகளை அளித்தார். பாஜகவே ஒரு போலி, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையும் போலி. இவ்வாறு அவர் கூறினார்.

"தமிழகத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் காங். வெற்றி பெறும்": கிரிஷ் சோடங்கர்
“மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” - பழனிச்சாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in