

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இடம் பெற அழைப்பு வந்துள்ளது என தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தோம்.
அப்போது அவர், எம்எல்ஏக்கள் அனைவரும் மக்களுக்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை புதிதாக கட்டமைக்க இதுவே சரியான நேரம். கட்சியை பலப்படுத்த கடுமையாக பாடுபட வேண்டும்.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கட்சியை வலுப்படுத்த எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.
மேலும், தமிழக அமைச்சரவையில் இடம் பெற எங்களுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது. இதன்மூலம் மக்களுக்குத் தேவையான நற்பணிகளை முன்னெடுப்போம். எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.