

சென்னை: பழநி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான வாழைப்பழம் விநியோகத்துக்கு புதிய டெண்டர்களை அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக, தரமான கற்பூரவள்ளி, குடகு மற்றும் மலைவாழைப் பழங்களை விநியோகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்கான முன்வைப்புத் தொகை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் 2027-ம் ஆண்டு ஜூன்30 வரைதங்குதடையின்றித் தொடர்ந்து வாழைப் பழங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட, ஒப்புக் கொண்ட விலையிலேயே தரமான பழங்களை வழங்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன் ஒப்பந்தப் புள்ளிக் கூட்டம் நவ.17-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும், ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்க நவ. 26-ம் தேதி காலை 10 மணி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பழநி கோயிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் ரூ.2 கோடியே 15 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் நகரும் தடுப்புகள் மற்றும் நிழற்கூடங்கள் அமைப்பதற்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதன்படி, கிரி வீதியில் 300 நகரும் தடுப்புகள் அமைப்பதற்காக ரூ.1 கோடியே 80 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு ரூ.1 லட்சத்து 500 முன்வைப்புத் தொகையும், பணிகளை முடிக்க 270 நாள் அவகாசமும் வழங்கப்பட்டுள் ளது.
மேலும், மலைக்கோயிலில் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் சிரமமின்றி காத்திருப்பதற்காக நகரும் நிழற்கூடம் அமைக்க ரூ.35 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.28 ஆயிரம் முன்வைப்புத் தொகையும், 90 நாள் பணிக்காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளி தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்களை https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.