

மத்தியில் அமைச்சராக 5 வருடங்கள் அதிகாரம் செய்துவிட்டாலும் ஒருமுறையாவது சட்டசபைக்குச் சென்று சபதம் முடிக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் அடங்கவில்லை முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வனுக்கு.
கடந்த 2001-ல் நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் காந்திச்செல்வன். அப்போது நாமக்கல் தனித் தொகுதியாக இருந்ததால் 2001 தேர்தலில் கபிலர்மலையில் களம் கண்டார் காந்திச்செல்வன்.
ஆனால், அப்போது சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். சீட் கிடைக்காத ஆதங்கத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளரான கே.கே.வீரப்பனும் சுயேச்சையாகக் களமிறங்கி சுமார் 10 ஆயிரம் வாக்குகளைப் பங்கு போட்டதாலேயே பதம் பார்க்கப்பட்டார் காந்திச்செல்வன்.
இதனால் அடுத்த தேர்தலில் திருச்செங்கோட்டில் கால்பதித்த காந்திச் செல்வனை 116 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் (முன்னாள் அமைச்சர்) தங்கமணி தோற்கடித்தார். அப்போதும் காந்தியை காலைவாரியது ‘உள்ளடி’ அரசியல் தான் என்ற பேச்சு உண்டு.
இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் தனக்கு சரிப்பட்டுவராத காரணத்தால், 2009 மக்களவைத் தேர்தலில் புதிதாக உருவான நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காந்திச் செல்வன். அப்போது அவரை மத்திய இணையமைச்சராகவும் ஆக்கியது திமுக தலைமை. ஆனால், என்னதான் மத்திய இணையமைச்சராக இருந்துவிட்டாலும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடியாத ஏக்கம் அவருக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
இதனிடையே, கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட காந்திச்செல்வன் சமீப ஆண்டுகளாக கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வந்தார். அப்படியாகப்பட்டவருக்கு இப்போது மீண்டும் தேர்தல் ஆசை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. இப்போது பொதுத் தொகுதியாக மாறிவிட்ட தனது சொந்தத் தொகுதியான நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் இம்முறை எப்படியாவது நின்று வென்றாக வேண்டும் என்ற திட்டத்துடன் முழு மூச்சாய் களமிறங்கி இருக்கிறார் காந்தி.
மாவட்டச் செயலாளராக இருந்த போதே காந்திச்செல்வனை காலைவாரத் துணிந்த கழக உடன்பிறப்புகள், இம்முறை அவருக்கு நாமக்கல் சீட்டைக் கிடைக்க விடுவார்களா... அப்படியே கிடைத்தாலும் அவரை சபைக்கு போக விடுவார்களா என்பதை காலமும் கழகமும் தான் தீர்மானிக்க வேண்டும்.