

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஒருவழியாக தவெக-வில் சேர்ந்துவிட்டார். அவருக்கு முன்பு நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனிக்கட்சி திட்டத்தில் இருக்கிறார். தனிக்கட்சி நடத்தும் தினகரன் பழனிசாமியை பதம்பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்களின் இந்த அரசியல் நகர்வுகளால் அதிமுக-வுக்கு பின்னடைவு வருமா என விவாதிக்கப்படும் நிலையில், போனவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் மெல்ல மெல்ல தமது கூட்டணியை பலப்படுத்தும் வேலைகளை ஓசையின்றி செய்து வருகிறார் பழனிசாமி.
2026 தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற தீவிரத்துடன் முதலில் பாஜக-வுடன் கூட்டணி உடன்பாடு செய்து கொண்ட பழனிசாமி, தங்கள் கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரப்போவதாகச் சொன்னார். அப்படியான பெரிய கட்சிகள் ஏதும் இன்னும் வந்தபாடில்லை என்றாலும் கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த ஃபார்வடு பிளாக் கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதேபோல் இன்னும் சில சிறிய கட்சிகளுடனும் பேசி வருகிறார் பழனிசாமியின் மகன் மிதுன்.
இதில்லாமல், தங்கள் கூட்டணியில் ஏற்கெனவே இருந்து பிரிந்து போயிருக்கும் பாமக மற்றும் தேமுதிக-வையும் தங்கள் கூட்டணிக்கு வர பழனிசாமி சம்மதிக்க வைத்து விட்டார் என்கிறார்கள். ராஜ்யசபா சீட் தரவில்லை என்பதற்காக அதிமுக-வுடன் சிலிர்த்துக் கொண்ட தேமுதிக, தங்களுக்கு திமுக-வுடன் நல்ல நட்பு இருப்பதாக காட்டிக் கொண்டது.
ஆனால் தேமுதிக விதித்த, 25 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் நிபந்தனைக்கு திமுக தயாராக இல்லை என்கிறார்கள். இதனால் தற்போது தேமுதிக மீண்டும் அதிமுக-வை நெருங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். 5 முதல் 10 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வேறு சில ‘சகாயங்களை’ செய்து தருவதாகவும் தேமுதிக-வுடன் அதிமுக பேசிவருவதாகச் சொல்கிறார்கள்.
அதேபோல, அன்புமணி தரப்பிலான பாமக-வும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வர தலையசைத்து விட்டதாகத் தெரிகிறது. அன்புமணியை பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா சந்தித்துப் பேசி இதை உறுதி செய்திருக்கிறார். 10 முதல் 15 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் பாமக-வுக்கு தரப்படலாம் எனப் பேசப்படுவதாகச் சொல்கிறார்கள்.
ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் உள்ள நிலையில் தற்போது தேமுதிக, பாமக-வும் உள்ளே வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பட்டியலினத் தலைவர்களையும் தங்கள் கூட்டணிக்குள் அடக்கிவிட ஆட்களைப் போட்டு வேலை செய்து வருகிறது பாஜக. பட்டியலின தலைவர்களை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் 44 தனி தொகுதிகளில் பெரும்பகுதியை வென்றெடுக்க நினைக்கிறதாம் பாஜக.
தங்கள் கூட்டணிக்கு ஏற்கெனவே உள்ள 39 சதவீத வாக்குகளுடன், மேலும் 10 சதவீத வாக்குகளை கொண்டு வந்து சேர்க்க எந்தெந்த கட்சிகளை எல்லாம் இணைக்க முடியுமோ அவர்களை எல்லாம் உள்ளே கொண்டு வரும் வேலையை பாஜக துணையுடன் பக்குவமாக செய்து வருகிறார் பழனிசாமி. இழந்ததைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதை வலுவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் பழனிசாமியின் முயற்சிகளுக்கு தகுந்த பலன் கிடைக்குமா என்பது போகப் போகத் தெரியும்.