

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் அவமதிப்பு மனுக்களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜிஆர்.சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்டஆட்சியர், மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதற்கு எதிராக அரசுத் தரப்பிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மோகன், வாஞ்சிநாதன் ஆகியோர், தீப வழக்கில் உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான பொருளுடன் தனி நீதிபதி இணைந்து விட்டார்.
எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நீதிபதி விசாரிக்கக் கூடாது என்றனர். பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதில் அவசரம் காட்ட முடியாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். இது சிறிய பிரச்சினை, ஊதிப் பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது.
மேல்முறையீடு மனு மீது இரு நீதிபதிகள் ஏற்கெனவே இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன் பிறகும் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மிகைப்படுத்துவது ஏன், இந்த வழக்கில் யாரும் குரலை உயர்த்தி நீதிமன்றத்தை மிரட்டும் நோக்கத்தில் பேசக் கூடாது என்றனர்.
அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் வீராகதிரவன், ரவீந்திரன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பிறகும் தனி நீதிபதி தொடர்ந்து விசாரிக்கிறார்.
டிச.4 உத்தரவுக்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் தடை விதிக்கவில்லை என்று கூறி தனி நீதிபதி விசாரணையை ஏப்.9-க்கு தள்ளிவைத்துள்ளார் என்றனர்.
பின்னர் நீதிபதிகள், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பிறகு அவர் விசாரிக்க முடியாது. அந்த வழக்கு தானாக இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்துவிடும்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா அல்லது இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பதை விசாரித்து உரிய முடிவெடுப்போம். அதுவரை அவமதிப்பு மனுக்கள் மீது தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜூன் 4-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.