

சென்னை: ‘ஆவின் நிறுவனத்துக்குச் சொந்தமான மாட்டுத் தீவன உற்பத்தி ஆலைகளை தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்’ என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியாளர்களின் நலனுக்காகவும் ஈரோடு, காசிபாளையம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை நடத்தி வருகிறது.
இதன்மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆலைகளை நிர்வகிக்க தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு டெண்டர் கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதனால், ஆலைகளில் பணியாற்றும் 125 ஊழியர்களுக்கு தங்கள் வாழ்வாதாரம் மற்றும் பணி பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் இத்தகைய நடவடிக்கைகள் சிறுதொழில் சார்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களைப் பாதிக்கும்.
எனவே, ஆவின் மாட்டுத்தீவன ஆலைகளை அரசே தொடர்ந்து நஷ்டமில்லாமல் நடத்தி மேம்படுத்த வேண்டும். அரசின் எந்த நிறுவனத்தையும் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.