

சென்னை: அயனாவரத்தில் மமலாபி (75) என்ற மூதாட்டி தனியாக வசிக்கிறார். இவரது பிள்ளைகள் திருமணமாகி வெளியூர்களில் உள்ளனர். இவர் மேல் தளத்தில் வசிக்கும் நிலையில் வீட்டின் கீழ் தளத்தை பத்ருன்னிஷா பேகம் (50) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
கடந்த 15-ம் தேதி, மூதாட்டி மமலாபி வீட்டுக்கு பத்ருன்னிஷா பேகத்தின் 14 வயது மகள் வந்தார். அவர் பாட்டி உங்களுக்கு பாயாசம் செய்து தரவா? எனக் கேட்டுள்ளார்.
நீ ஆசையாக கேட்பதால் கொஞ்சமாக செய்து கொடு என மூதாட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து மமலாபி வீட்டிலேயே சிறுமி பாயாசம் செய்து அவருக்கு கொடுத்துள்ளார்.
பாயாசம் பருகிய சிறிது நேரத்தில் மமலாபி மயங்கினார். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் எடைகொண்ட 2 செயின்கள் திருடுபோனது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் அயனாவரம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் பத்ருன்னிஷா பேகத்தின் வழிகாட்டுதல்படி அவரது 14 வயது மகள் பாயாசம் செய்து அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து பத்ருன்னிஷா பேகம், அவரது மகளை போலீஸார் கைது செய்தனர். பத்ருன்னிஷா பேகம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது மகள் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.