

பழநி மலையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஃபனிகுலர் வின்ச் ரயிலின் மாதிரி.
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக் கோயிலுக்குப் பக்தர்கள் எளிதில் செல்ல ‘ஃபனிகுலர் வின்ச்’ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 694 படிகளைக் கடந்து கோயிலுக்குச் செல்ல வேண்டும். பக்தர்கள் எளிதில் மலைக் கோயிலுக்குச் செல்ல 1966, 1981 மற்றும் 1982-ம் ஆண்டுகளில் மொத்தம் 3 மின் இழுவை ரயில் (வின்ச்) சேவை தொடங்கப்பட்டது. இவற்றின் மூலம் மணிக்கு 400 பேர் வரை செல்லலாம்.
நிறுத்தப்பட்ட திட்டம்: அதேபோல, 2004-ல் தொடங்கப்பட்ட ரோப் கார் (கம்பி வட ஊர்தி) மூலம் மணிக்கு 240 பேர் சென்று வரலாம். 2019-ல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒரு மணி நேரத்துக்கு 1,200 பக்தர்கள் செல்லும் வகையில் 2-வது ரோப் கார் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர்,கரோனா உள்ளிட்ட காரணங்களால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மலைக் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்லும் வகையில் ‘ஃபனிகுலர் வின்ச்’ ரயில் (Funicular winch- மின் இழுவை ரயில்) அமைக்கத் திட்டமிடப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் சப்தஸ்வரங்கி தேவி கோயிலுக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள ‘ஃபனிகுலர் வின்ச்’ ரயில் போன்று, பழநியில் ரோப் கார் அருகிலேயே இதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
90 விநாடிகளில் 80 பேர்: இந்த வின்ச் ரயிலில் அடிவாரத்தில் இருந்து 90 விநாடிகளில் 80 பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்லலாம். இகுறித்து ஆய்வு செய்த ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் நிறுவனம், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மலைகளுக்கு இடையே... பழநி சிவகிரிப்பட்டியில் கொடைக்கானல் சாலையில் இடும்பன் மலை உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து இடும்பன் கோயிலுக்கு 540 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். எனவே, பழநி மலைக்கும், இடும்பன் மலைக்குமிடையே ரோப் கார் அமைக்குமாறு பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
2023-ல் அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, ரூ.32 கோடியில் பழநி-இடும்பன் மலைகளுக்கிடையே ரோப் கார் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதையடுத்து, சில மாதங்களாக ஆய்வு நடத்திய நிபுணர்கள், புதிய ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, ரூ.67 கோடியில் ஃபனிகுலர் வின்ச் ரயில், ரூ.87 கோடியில் ரோப் கார் அமைக்கும் திட்டம் என மொத்தம் ரூ.154 கோடியில் இவ்விரு திட்டங்களையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.