வேலூரில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வந்த பங்க், அங்காடிகள் திடீர் மூடல்

அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு
வேலூரில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வந்த பங்க், அங்காடிகள் திடீர் மூடல்
Updated on: 
2 min read

வேலூர்: வேலூரில் நன்னடத்தை கைதிகள் நடத்தி வந்த பெட்ரோல் பங்க், கோழி இறைச்சி கடைகள், அங்காடிகள் திடீரென மூடப்பட்டன. இதனால், அரசுக்கு வருவாய் இழுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவங்களால் சிறைத்துறை இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் தனி சிறைகள், 13 மாவட்ட சிறைகள் என மொத்தம் 125 சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 23 ஆயிரத்துக்கும் மேல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறை வாழ்க்கையில் உள்ள கைதிகள், மதிப்புமிக்க சமுதாய வாழ்வில் அடியெடுத்து வைக்கவும், சமூக மறு ஒருங்கிணைப்புக்கான முன் முயற்சியாகவும், தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து மத்திய சிறைச்சாலைகள் மூலம் பெட்ரோல் பங்க், அங்காடி, உணவகம் ஆகியவற்றை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை, வேலூர் மத்திய சிறைச்சாலை அருகாமையில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு நன்னடத்தை கைதிகள் மூலம் பங்க் இயக்கப்பட்டு வந்தது.

அதேபோல, அங்காடி, உணவகம், தேநீர் கடை, இறைச்சி கடைகள் தொடங்கப்பட்டு இயங்கப்பட்டு வந்தன. இதற்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. அதன்பிறகு மத்திய சிறை சாலைகளான பாளையங்கோட்டை, புழல் சிறை சாலைகளில் நாட்டிலேயே முதல் பெண் சிறை கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. தொடர்ந்து, புதுக்கோட்டை, மதுரை, சேலம் ஆகிய 7 சிறை சாலைகளின் சார்பில் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டன

ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் 15 முதல் 20 நன்னடத்தை கைதிகளுடன் 11 சிறை அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் பங்க் 8 மணி நேரம் என்ற அளவில் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர்.

ஒரு சிறைவாசிக்கு நாளொன்றுக்கு ஊக்கத்தொகையாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இதுமட்டுமின்றி சிறைச்சாலைகளின் அருகே கோழி இறைச்சி கடைகள், கைதிகள் தயாரிக்கப்படும் காலணிகள், பைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் சிறிய அங்காடிகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், பொதுமக்களும் அதிகளவில் விரும்பி பொருட்களை வாங்கி சென்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த வாரம் புழல் மத்திய சிறையில் இருந்து2கைதிகளும், கடந்த 26-ம் தேதி தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகளும் தப்பிச்சென்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக, தேனி மாவட்ட சிறையில் இருந்த மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி 17 கைதிகள் தப்பிச்சென்ற சம்பவம், சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதேபோல், நேற்றும் கோவையிலும் ஒரு கைதி தப்பினார். அடுத்தடுத்து கைதிகள் தப்பி செல்லும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பொதுமக்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறின.

இதனால், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், கைதிகள் தப்பி செல்லாத வகையில் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, மாநிலம் முழுவதும் 7 மத்திய சிறை சாலைகளின் கீழ் இயங்கும் பெட்ரோல் பங்க் நேற்று காலை முதல் திடீரென மூட சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி வேலூர் மத்திய சிறை சாலையின் எதிரே தொரப்பாடி பகுதியில் இயங்கி வந்த பெட்ரோல் பங்க் நேற்று காலை உடனடியாக மூடப்பட்டது. அதேபோல், அதன் அருகே செயலபட்டு வந்த சிறிய அங்காடியும், கோழி இறைச்சிக்கடைகளும் மூடப்பட்டன.

ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலும், கோழி இறைச்சி கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைத்தது.

இந்நிலையில், எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென ஒரே நாளில் அனைத்தும் மூடப்பட்டு இருப்பத்தால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் அதிருப்தியை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிறைகளில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, நன்னடத்தை கைதிகளை கொண்டு சிறைக்கு வெளியே நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகள், கோழிக்கறி கடைகள், சிறிய அங்காடிகள் போன்றவைகளை மூடப்பட வேண்டும் என சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் உடனடியாக இன்று (நேற்று) காலை அனைத்தும் மூடப்பட்டன.

உடனடியாக மூடப்பட்டுள்ளதால் பெட்ரோல் பங்கில் உள்ள பெட்ரோல், டீசல் அப்படியே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இது திறக்க வாய்ப்பு இல்லை. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்து வியாபாரம் செய்யப்படும்.

அதன்படி, இந்தாண்டும் தற்காலிக பட்டாசு கடை வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி பெற்று தயார் நிலையில் இருந்தோம். இன்று (நேற்று) முதல் பொதுமக்களின் விற்பனைக்கு திறந்து வைக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால், தற்போது எந்த பொருட்களையும் வெளியில் விற்பனை செய்ய கைதிகளை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

இதனால், பட்டாசு கடையும் திறக்கப்படவில்லை. பெட்ரோல் பங்க், இறைச்சி கடை, அங்காடிகளில் பணியாற்றி நன்னடத்தை கைதிகளை மீண்டும் அந்தந்த சிறைகளில் இன்று (நேற்று) முதல் அடைக்கப்பட்டனர். அவர்கள், அடைக்கப்பட்ட விவரங்கள் சிறைத்துறை நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றனர்.

வேலூரில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வந்த பங்க், அங்காடிகள் திடீர் மூடல்
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஹார்மர் பந்துவீச்சில் வென்றது தென் ஆப்பிரிக்கா

X