ஓபிஎஸ், தினகரன் முதல் விஜய் வரை... பழனிசாமி - பியூஷ் கோயல் சந்திப்பில் பேசியது என்ன?

ஓபிஎஸ், தினகரன் முதல் விஜய் வரை... பழனிசாமி - பியூஷ் கோயல் சந்திப்பில் பேசியது என்ன?
Updated on
2 min read

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக – பாஜகவின் முதல் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ஓபிஎஸ் - தினகரன் இணைப்பு, தவெகவின் தாக்கம், தொகுதிப் பங்கீடு குறித்த பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

அதிமுக – பாஜக கூட்டணி 2026 தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிமுக – பாஜக கூட்டணியில் தமாகாவை தவிர வேறு எந்தக் கட்சியும் இப்போதுவரை அதிகாரபூர்வமாக இடம்பெறாத நிலையில், இரு கட்சி தலைவர்களின் ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி, “ஊழல் திமுக ஆட்சியை அகற்றி, 2026-ல் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்” என ஒரே குரலில் சொன்னார்கள்.

மேலும், அவர்கள் தற்போதைய கள நிலவரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததையும் தெரிவித்தனர். இந்தச் சூழலில்தான், அவர்கள் ஆலோசித்த விஷயங்கள் குறித்து தகவல்கள் கசிந்துள்ளது. ஏனென்றால், பியூஷ் கோயல் ஏற்கெனவே 2019, 2021 தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர். இதனால்தால் ஏற்கெனவே பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பைஜெயந்த் பாண்டாவை மாற்றி பியூஷ் கோயல் மீண்டும் கொண்டுவரப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் கோயலுக்கு தமிழக அரசியல் நிலவரம், அதிமுக உள்கட்சி விவகாரம் உள்ளிட்டவை பரிச்சயப்பட்டது. எனவே அவர் தற்போதைய அப்டேட் தகவல்களை பெற்றுக்கொண்டு சென்னை வந்து இறங்கினார்.

இவரின் முதல் பேச்சுவார்த்தை நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அதிமுக – பாஜக கூட்டணியை பலப்படுத்துவது. அதாவது ஏற்கெனவே நட்புறவில் உள்ள பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஜான்பாண்டியன், மூமுக உள்ளிட்ட கட்சிகளை உள்ளே இழுக்கும் வியூகம் வகுக்கப்பட்டதாம். அந்தக் கட்சிகளுக்கு உள்ள டிமாண்ட் என்ன, அதனை எப்படி பூர்த்தி செய்வது என்பன குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளைக்கூட விடாமல் கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றி சில ஆலோசனைகள் பியூஷ் கோயல் வழங்கியுள்ளார்.

இரண்டாவது, அதிமுகவிலிருந்து விலகிய தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை உள்ளே கொண்டு வருவது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கருத்துக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரன், ஓபிஎஸ் போன்றோர் இடம்பெறாவிட்டால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. அதேபோல இவர்களை சிக்கலில்லாமல் கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றியும் பாஜக சார்பில் சில ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.

தங்களுக்கு மொத்தமாக தொகுதிகளை கொடுத்தால், அதிலிருந்து ஓபிஎஸ், தினகரனுக்கு பங்கிட்டு கொடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்னட் பேசிய நயினார் நாகேந்திரன், ‘அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பரோ இல்லை. திமுக ஆட்சியை வீழ்த்த விரும்புபவர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்றார்.

மூன்றாவதாக, முதல்கட்ட தொகுதி பங்கீடு பற்றி பேசப்பட்டுள்ளது. அதில் பாஜக தரப்பில் சுமார் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், அதிமுக 20 – 23 தொகுதிகள் ஒதுக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், 170 தொகுதிகளில் நிற்க விரும்புவதாக அதிமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து உத்தேசமான பட்டியலையும் அதிமுக கொடுத்துள்ளது.

நான்காவதாக, திமுக மற்றும் தவெக கூட்டணியை தங்கள் பாணியில் எதிர்கொள்ளும் வியூகம் பற்றி பாஜக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. புதிய கட்சியான தவெகவை எதிர்கொள்வது பற்றியும் விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் தவெக சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிப்பதால், அது திமுகவுக்கு பாதகமாகும். எனவே தவெக தனியாக நிற்பதே நல்லது என சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தவெக கூட்டணியை பலப்படுத்த விடக்கூடாது எனவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தவெக பக்கம் சாய வாய்ப்புள்ள ஓபிஎஸ், தினகரன், புதிய தமிழகம், தேமுதிக போன்ற கட்சிகளிடம் முறையாக பேசி அதிமுக கூட்டணி பக்கம் கொண்டுவரவும் ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளது.

ஒருபக்கம் திமுக கூட்டணி பலமாக தயார் நிலையில் நிற்க, அதற்கு இணையான வலுவான கூட்டணியை அமைத்தே தீருவோமென கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது அதிமுக – பாஜக அணி. அதற்கான முதல் படியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது என அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ், தினகரன் முதல் விஜய் வரை... பழனிசாமி - பியூஷ் கோயல் சந்திப்பில் பேசியது என்ன?
அணு ஆயுதம் முதல் ஏஐ தொழில்நுட்பம் வரை - ‘ட்ரம்ப் க்ளாஸ்’ போர்க் கப்பல் அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in