புதுச்சேரியில் அரசு, அரசு சார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி

பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் அரசு, அரசு சார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி

படம்: எம்.சாம்ராஜ்

Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட்டின் கூடுதல் அம்சங்கள்: புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் அவசரகால மீட்புத் திறனை மேம்படுத்தும் வகையில் மேம்பட்ட தீயணைப்பு வாகனங்கள், சிறிய தீயணைப்பு வாகனங்கள், விரைவு அவசரகால பதிலளிப்பு வாகனங்கள் மற்றும் பிற சிறப்பு மீட்பு வாகனங்களை நடப்பு நிதியாண்டில் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நடப்பு நிதியாண்டில் புதிதாக 1.000 மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த முதியோருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்புடைய ஆழ்கடல் மின்பிடி படகுகள் வாங்குவதற்கு பெண் மீனவ பயனாளிகளுக்கு 30 விழுக்காடு மானியம், ஆண் மீனவ பயனாளிகளுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் வாங்குவதற்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு ரூ.7,500 மதிப்புடைய குளிரூட்டும் பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும்.

பசுமைப் பரப்பளவை அதிகரிப்பதற்காக, மணப்பட்டு வனம் மற்றும் கடலோரப் பகுதிகளில் 55 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் மற்றும் 21 ஹெக்டேர் பரப்பளவில் புதிய காடுகள் உருவாக்கப்புடும்.

மேலும் அம்மா வனம், ஆன்மிக வனம் மற்றும் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ உள்ளிட்ட பல்வேறு காடுவளர்ப்புத் திட்டங்களின் கீழ் சாலை ஓரம், ஏரிக்கரை ற்றும் பள்ளிகளில் 4.11 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். கடலோரப்பகுதிகளில் 2 லட்சம் பனைவிதைகள் நடவு செய்யப்படும்.

மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 76 பள்ளிகளில் நாற்றங்கால் நிறுவப்படும். நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து கடல் ஆமைகளை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கண் சிகிச்சைக்காக 50 படுக்கைகள் கொண்ட கண் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. தற்போது செயல்பட்டு வரும் கண்தான மையம் முழுமையான கண் வங்கியாக தரம் உயர்த்தப்படும். கண் சிகிச்சைக்கு தேவையான நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.

புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியில் நடப்பு நிதியாண்டு முதல் பல் மற்றும் முகதாடை சீரமைப்பு மற்றும் பொது சுகாதார பல் மருத்துவ பிரிவுகளில் முதுகலை பல் அறுவை சிகிச்சை படிப்புகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும், மாணவர்களுக்கு போக்குவரத்து செலவால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கவும், எனது அரசு புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்.

பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் புதுப்பித்தல் மற்றும் சிறப்பு பழுதுபார்ப்பு பணிகளுக்காக ரூ.11.50 கோடி மானிய உதவி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு ரூ.10.50 கோடியும், துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களுக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும். மேலும் கோயில்களில் ஒரு கால பூஜை நடத்துவதற்காக ரூ. 75 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அரசு தற்போது நடைமுறையில் உள்ள தொழில் கொள்கையை மாற்றியமைத்து, இன்றைய தேவைகளுக்கு ஏற்ற புதிய தொழில் கொள்கையை உருவாக்கி வருகிறது.

இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களில் (ஐடி, ஐடிஇஎஸ்) 150 மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையுடன் 12 மாத காலத்துக்கு டிஜிட்டல் பயிற்சி பணிவாய்ப்பு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வரால அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு, அரசு சார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியுடன் உணவுப் பொருட்கள் தொகுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in