

ஏஐ படம்
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி விநியோகம் செய்வதற்கான டெண்டர் பிரபல ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியைவிட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்தபின் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் மிதிவண்டிகளின் தரத்தை மேம்படுத்த முடிவு செய்தது.
அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2026-27) மாணவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.277 கோடியில் 5.32 லட்சம் நவீன மிதிவண்டிகள், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான டெண்டர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கடந்த ஆக.28-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த டெண்டரில் ஹீரோ சைக்கிள்ஸ் லிமிடெட் நிறுவனம் குறைந்த விலையைக் குறிப்பிட்டு முதலிடம் பிடித்தது. அதில் ஒரு மாணவருக்கு வரிகள் உள்பட ரூ.7,235 மதிப்பிலும், ஒரு மாணவிக்கு வரிகள் உள்பட ரூ.7,476 மதிப்பிலும் சைக்கிள் வழங்குவதாக விலை நிர்ணயம் செய்திருந்தது. இந்த விலைகளின்படி கொள்முதல் செய்தால், அரசுக்கு ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.392 கோடி செலவாகும்.
இது ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக சுமார் ரூ.115 கோடிசெலவாகும் நிலை இருந்தது. இதன்காரணமாக விலையை குறைப்பதற்காக ஹீரோ நிறுவனத்துடன் தமிழக அரசு தரப்பில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
அதன்பலனாக மாணவருக்கு ரூ.5,260-க்கும், மாணவிக்கு ரூ.5,130-க்கும் விலையை குறைக்க ஹீரோ நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதாவது, சைக்கிளின் அடிப்படை விலை மாணவருக்கு ரூ.4,369, ஜிஎஸ்டி ரூ.218 மற்றும் மாணவி சைக்கிள் ரூ.4,245, ஜிஎஸ்டி ரூ.212 என்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதுதவிர ஹெல்மெட் ரூ.560, தண்ணீர் பாட்டில் ரூ.112 ஆகியவற்றின் விலையும் ஜிஎஸ்டி வரிகளுடன் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இலவச சைக்கிள்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான டெண்டர் ஹீரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 5 மாதங்களில் சைக்கிள்களை தயாரித்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வா? - இதற்கிடையே முந்தைய திமுக ஆட்சியைவிட சற்று குறைந்த விலைக்கே சைக்கிள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 202526-ம் ஆண்டில் ஒரு சைக்கிள் மாணவருக்கு ரூ.4,375-க்கும், மாணவிக்கு ரூ.4,250-க்கும் வாங்கப்பட்டன.
தற்போது அதைவிட குறைவாக மாணவருக்கு ரூ.4,369-க்கும், மாணவிக்கு ரூ.4,245-க்கும் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. மேலும், அப்போது சாதாரண சைக்கிள்கள் மட்டுமே வாங்கப்பட்டன. தற்போது ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள்கள் வாங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.