

சென்னை: தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் 10 ஆயிரம் புதிய காவலர்களை நியமிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
தீபாவளி பண்டிகை அன்று மட்டும் 13 கொலைகள் நடைபெற்றன. இதைச் சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும், சிறை கைதிகள் தப்பிய விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சூழலை ஆய்வு செய்வதற்காக, முதல்வர் விஜய் நேற்று முன்தினம் உயர்மட்ட ஆய்வு கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினார்.
தலைமைச் செயலர் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டம், இந்த வாரத்தில் முதல்வர் நடத்திய 3-வது சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டமாகும்.
இதில், மாநிலத்தில் பதிவான பல்வேறு கொலை வழக்குகள், அவற்றின் பின்னணி மற்றும் காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விரிவாக விளக்கினர்.
மேலும், காவல் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகளவில் உள்ளதை முதல்வரிடம் போலீஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, காவல் துறையை வலுப்படுத்தும் விதமாக அடுத்த 6 மாதங்களுக்குள் 10 ஆயிரம் காவலர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.