

லால்குடியில் கிறிஸ்துராஜ் வீட்டில் சோதனை நடந்த போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர்.
சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 1.33 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகள் வெளியானதும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகத் தேர்வர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, சிலருடைய மதிப்பெண்கள் முறைகேடாக உயர்த்தப்பட்டதாகவும், பணம் பெற்றுக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் உமா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், தேர்வுக்கான விடைத் தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களைத் தயாரித்த டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தேர்வில் முறைகேடு செய்ததாக 156 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த முறைகேட்டில் தரகர்கள், டேட்டா என்ட்ரி நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என 19-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகவும், மொத்தமாக ரூ.50 கோடிக்கும் அதிகமான தொகை கைமாறி இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத் துறை (இடி) அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், சென்னை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 18 இடங்களில் நேற்று காலை முதல் திடீர் சோதனை நடத்தினர். சென்னையைப் பொறுத்த வரை கொளத்தூர் விநாயகபுரம் சிவாஜி நகரில் உள்ள ரகுபதி, பெரவள்ளூர் எஸ்ஆர்பி காலனியில் உள்ள விநாயகமூர்த்தி, மேற்கு அண்ணா நகர் 5-வது தெருவில் வசிக்கும் செந்தில் குமார், புதுப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது இஸ்மாயில் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திமுகவைச் சேர்ந்த கிறிஸ்துராஜ், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஆங்கரை கவுன்சிலராக இருந்தவர். லால்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். இவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 4 பேர், நேற்று பிற்பகல் 1 மணி முதல் இவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் பொள்ளாச்சி மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் குணசேகரனின் குரும்பபாளையத்தில் உள்ள வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மோசடி தொடர்பாக ஏற்கெனவே, குணசேகரனைப் போலீஸார் கைது செய்தனர். தற்போது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
ஆவணங்கள் பறிமுதல்: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், வங்கிப் பணப்பரிவர்த்தனை பதிவுகள், மின்னணு சாதனங்கள் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் சோதனையின் முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.