

சிவகங்கையில் ஆன்லைன் செயலி மோசடியால் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க வந்த மக்கள்.
சிவகங்கை: ஆன்லைன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை போல் சிவகங்கையிலும் புகார்கள் குவிந்து வருகின்றன.
எப்.க்யூ.எல் (FQL), வி.ஜே ஆகிய ஆன்லைன் செயலிகளில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என விளம்பரம் செய்தனர். இதில் ஒரு செயலி மூலம் ரூ.50 ஆயிரம், மற்றொன்றில் ரூ.1 லட்சம் முதலீடு பெற்றனர்.
இதற்காக நியமிக்கப்பட்ட முகவர்கள், முதலீடு செய்தோரின் செல்போனில் அந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளனர். பின்னர், அந்த செயலிகளில் முதலீடு செய்த பணம் டாலர் மதிப்பில் காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயலிக்கு வரும் குறுந்தகவலை ‘க்ளிக்’ செய்து ‘டிரேடிங்’ செய்தால் டாலரின் மதிப்பு உயரும் என்றும் கூறியுள்ளனர். அதன்படி, சிலருக்கு பணமும் வழங்கியுள்ளனர். இதை நம்பி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அருகே உள்ள பையூர், அய்யம்பட்டி, அல்லூர், உடையநாதபுரம், காரம்பட்டி, புரசடைஉடைப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன், செயலிகள் முடங்கியதை அடுத்து, முதலீடு செய்தோருக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட சிவகங்கை பையூர், அல்லூர், புரசடைஉடைப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்களிடம் மனுக்களை பெற்று கொண்ட மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், தொடர்ந்து அது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரிடம் புகார்களை பெற்று வருகிறோம். இது தொடர்பாக இன்னும் அதிகளவில் புகார் மனுக்கள் வர வாய்ப்புள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டோர் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
ஏற்கெனவே சிலரை மதுரை மாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால், இந்த வழக்கை முழுமையாக மதுரை மாவட்ட போலீஸார் விசாரிப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.