

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், என்.சுப்பிரமணியன் ஆகியோர் பகை மறந்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இணைந்து கலந்துகொண்டனர்.
கடந்த 2006-2011-ல் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த என்.சுப்பிரமணியன், அதன் பிறகு தொகுதி மறுசீரமைப்பின் மூலம் உருவான கந்தர்வக்கோட்டை தொகுதியில் 2011-2016-ல் வென்று, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராகவும் இருந்தார். அதன் பிறகு, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
அதேபோல, எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் கிளைச்செயலாளராகவே இருந்து வந்த இவருக்கு வேறு பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. இதனால், அப்போதைய மாவட்டச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பனிப்போர் நீடித்து வந்தது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் தனக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதிய சுப்பிரமணியன், தவெகவில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்று, 3-வது முறையாக எம்எல்ஏவானார்.
அதேபோல, தேர்தலுக்குப் பிறகு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கரும் தவெகவில் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்வு சுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை வெளிப்படுத்தும் விதமாகவே, புதுக்கோட்டை மற்றும் விராலிமலையில் அண்மையில் நடைபெற்ற தவெக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திலும், கட்சி மற்றும் சில அரசு நிகழ்ச்சிகளிலும் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ பங்கேற்காமல் தவிர்த்து வந்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், விஜயபாஸ்கர் நடத்திய தவெக இணைப்பு விழாவிலும் இவர் ஆர்வம் காட்டவில்லை. மேலும், தனித் தொகுதி எம்எல்ஏ புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல், இலுப்பூர், மேலப்பட்டி, குளக்காரன்பட்டி, கூத்தங்குடி உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் கட்சி சார்ந்த மொத்தம் 9-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
இதேபோல, கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாமலை, கீழமுத்துக்காடு, கிள்ளனூர் மற்றும் வீரப்பட்டி ஆகிய இடங்களிலும் அரசு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டார். இவ்விரு தொகுதிகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்து கலந்துகொண்டனர்.
மேலும், அமைச்சர் முகமது பர்வேஸுடன் இணைந்து சுப்பிரமணியன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளைத் திறந்துவைத்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பிரிந்திருந்தவர்கள் திடீரென இணைந்து, அன்பு பாராட்டிக் கொண்டது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.
‘‘இவர்களைக் கட்சியின் தலைமை அழைத்துச் சமாதானப்படுத்தி அனுப்பியதா? அல்லது இவர்களே சமாதானம் ஆகிக்கொண்டார்களா? என்று தெரியவில்லையே!’’ என விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசிக்கொண்டனர்.