“தனியார்மய எண்ணத்தை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்” - வேல்முருகன் வலியுறுத்தல்

வேல்முருகன் | கோப்புப் படம்
வேல்முருகன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தனியார்மய எண்ணத்தை முதல்வர் விஜய் முற்றிலுமாகக் கைவிட்டு, அரசின் நேரடி கண்காணிப்பிலேயே விமான நிலைய உள்கட்டமைப்பை தரம் உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை விமான நிலையத்தை தற்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) என்ற மத்திய அரசின் பொதுத்துறை அமைப்பு நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்குப் பதிலாக மாற்று ஆபரேட்டரை நியமிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது, சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான அடித்தளமாக அமையுமோ என்ற தீவிர ஐயத்தை ஏற்படுத்துகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டிய காலகட்டத்தில், நிர்வாகத்தை மாற்ற முனையும் இந்த அணுகுமுறையை வன்மையாக கண்டிகிறோம். பயணிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சரக்கு கையாளும் திறன் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்கான தீர்வு அரசு நிர்வாகத்தை மாற்றுவதுதானா?.

இந்திய விமான நிலையங்கள் ஆணைய நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பின், அவற்றைச் சுட்டிக்காட்டி தேவையான நிதி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மனிதவள கட்டமைப்புகளை பெற்றுத் தந்து திறம்பட செயல்பட வைப்பதே மக்கள் நல அரசின் பொறுப்பாகும். தமிழக அரசு, இந்திய விமான நிலையங்கள் ஆணைய நிர்வாகத்தில் உள்ள இடர்பாடுகளை வெளிப்படையாக ஆராய்ந்து, அவற்றை மத்திய அரசுடன் இணைந்து களைய முன்வர வேண்டும்.

விமான நிலைய நிர்வாகம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான அனைத்து முடிவுகள், ஒப்பந்த விதிகள் மற்றும் பொருளாதார தாக்கங்களை மக்களிடம் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.

சென்னை விமான நிலையம் என்பது போக்குவரத்து தளம் மட்டுமல்ல. அது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான முதன்மை நுழைவாயில். அதன் எதிர்காலம் சார்ந்த முடிவுகள் பெருநிறுவனங்களின் லாபத்தை முன்னிறுத்தாமல், தமிழகத்தின் மக்களின் நலனையும் பொதுச் சொத்து பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் அமைய வேண்டும்.

எனவே, தனியார்மய எண்ணத்தை முதல்வர் விஜய் முற்றிலுமாகக் கைவிட்டு, அரசின் நேரடி கண்காணிப்பிலேயே விமான நிலைய உள்கட்டமைப்பை தரம் உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் | கோப்புப் படம்
“மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது” - அமைச்சர் வன்னி அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in