

சென்னை: “முதல்வர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார். இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் அவரது கரூர் பயணம் அமைந்தது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் விஜய் வழக்கமான ஸ்கிரிப்டை தான் பேசுயுள்ளார். சினிமாவில் ஒரு ஷாட் எடுப்பதை போல, வசனத்தை ஒப்பித்துவிட்டார். இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் விஜய்யின் கரூர் பயணம் அமைந்தது. தவெக ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலை தருவோம் என சொன்னீர்கள்; அதை செய்யவில்லை. மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள் குறித்து கரூரில் பேசியிருக்கலாம்; ஆனால் பேசவில்லை.
விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசவில்லை. விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிடுகிறார்கள். தான் சம்பாதித்த பணத்தை எம்ஜிஆர் வாரி வாரி வழங்கினார். இத்தனை ஆண்டுகளில் விஜய் கோடி கோடியாக சம்பாதித்திருக்கிறார். கரூரில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி கொடுத்திருக்கலாமே? அரசு வேலையை கொடுத்து, டிஎன்பிஎஸ்சி-க்கு படிப்பவர்களின் வாய்ப்பை ஏன் பறிக்க வேண்டும்?.
தீய சக்தி, அந்த சக்தி, இந்த சக்தி என விஜய் பேசியிருக்கிறார். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் யாரை உடன் வைத்துவிட்டு, இதையெல்லாம் அவர் பேசுகிறார்? முதல்வர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார்” என்று அவர் கூறினார்.