“திமுகவும், அதிமுகவும் கூட்டுக் களவாணிகள்” - கரூரில் தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வரும், தவெக தலைவருமான விஜய். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்றவர்களின் ஒரு பகுதியினர்.						               படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வரும், தவெக தலைவருமான விஜய். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்றவர்களின் ஒரு பகுதியினர். படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

Updated on
2 min read

கரூர்: ‘திமுகவும், அதிமுகவும் கூட்டுக் களவாணிகள். தங்களுக்குள் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்றால், வரும் இடைத்தேர்தலில் அதை நிரூபித்துக் காட்டுங்கள்’ என்று தவெக தலைவரும், முதல்வருமான விஜய் பேசினார்.

கரூர் அட்லஸ் கலையரங்க வளாகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் கரூர் பிரச்சாரத்தின்போது கூட்டம் அதிகமாக இருந்தது குறித்து போலீஸார் அலர்ட் செய்திருக்கலாம், அல்லது கூட்டத்தை ரத்து செய்திருந்தால் துயர சம்பவம் நடத்திருக்காது. ஆனால், அதையெல்லாம் செய்யாமல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரச்சாரம் நடைபெற்ற இடத்துக்கு போலீஸாரே எங்களை அழைத்து வந்தனர். அப்போது அது நாடகம் என்று எனக்கு தெரியாது. பேசும்போது அவர்களுக்கு நன்றியெல்லாம் கூறினேன்.

இதற்கெல்லாம் யார் காரணம்? யார் சொல்லி இதை செய்தார்கள்? பிரஷர் கொடுத்தது யார்? கரூர் துயர சம்பவத்தில் எனது அக்கா, தங்கைகள், கள்ளம் கபடமற்ற மழலைகளை இழந்திருக்கிறோம். உறவுகளை இழந்த என்னைஏளனமாக பேசுகின்றனர். என் மீது பழியை தூக்கிப் போடுகின்றனர். வலி, வேதனையோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்து விட்டதாகப் பேசினார்கள். சட்டப்பேரவையில் ஸ்டாலின் இதைப் பேசி அரசியல் செய்தார்.

மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதி நான் இல்லை. மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தவன். நமக்கு வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால் அதுமட்டும் போதாது.

காலாகாலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தமான பதிலடி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்றபெயரில் தீய சக்தியும், தீர்ந்துபோன சக்தியும் மாறி மாறி கொள்ளையடித்தனர். சட்டப்பேரவை யில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்றுதான் சொன்னேன். உடனே ஓட்டம் எடுத்தனர்.

குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும். சென்னையில் ஒரு பாலம் கட்ட ஆகும் செலவை விட இருமடங்கு கூடுதலாக வைத்து டெண்டர் விட்டுள்ளனர். அதையெல்லாம் கண்டுபிடித்து ரத்து செய்துள்ளோம். எத்தனை ஊழல் தோண்ட தோண்ட வெளியே வரும் என்று தெரியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அடுத்து, அண்ணாபிறந்தநாளன்று ‘தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்படும். நான் திமுக போன்று ரீல்ஸ் தாய்மாமன் இல்லை; ரியல் தாய்மாமன்.

உரிமையை விட்டுத்தர மாட்டோம்: ‘வாயை திறங்க சிஎம்’ என்கிறார்கள். பேசினால் எழுந்து ஓடிவிடுகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டாபோட்டு விட்டார்கள். இதுக்கு மேலே பேசினால் மொத்தமாக முடிந்துவிடும். மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் ஏன் தள்ளுபடி செய்தது?

கடந்த திமுக ஆட்சியில் ஒழுங்காக வாதாடாமல் விட்டுவிட்டார்களா? இப்படியெல்லாம் கேட்டால்தான் மேகேதாட்டு அணை குறித்து பேசியதாக அர்த்தமா? கர்நாடக முதல்வர் பேசுகிறார், நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்கிறார்கள். நமது மாநில உரிமையைஎங்கு நிலை நிறுத்தவேண்டுமோ அதற்கான வேலையை பார்ப்பதுதான் முக்கியம். அதைவிட்டு சவால்விட்டு பேசிக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது. ‘டாக்லெஸ்; ஒர்க் மோர்’ பாலிசிதான் நம்ம பாலிசி.

மத்திய அரசு தொகுதி மறுவரையறை கொண்டு வரப்போவதாக தகவல் வருகிறது. யார் எதைக் கொண்டு வந்தாலும் தமிழகம் அதை ஒப்புக் கொள்ளாது. நமது உரிமையை யாருக்காவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். திமுகவும்,அதிமுகவும் கூட்டுக் களவாணிகள். தங்களுக்குள் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று இவர்களால் நிரூபிக்க முடியுமா? வரும் இடைத்தேர்தலில் அதை நிரூபித்துக் காட்டுங்கள்.

கரூரில் நினைவுச் சின்னம்: கரூரில் நமக்கு ஏற்பட்ட வேதனை சம்பவத்தை, நமக்கு எதிராக நடந்த சூழ்ச்சியை, சதியை இனிவரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்காக தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இப்போது நான் எங்கு செல்லவேண்டும்; செல்லக்கூடாது என்று திமுக சொல்கிறது. கண்விழித்து பாருங்கள்.

உங்களது ஆட்சிமுடிந்து தவெக ஆட்சி வந்து பலநாட்களாகி விட்டன. உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி தீர்ப்பு கொடுத்தும், திருந்துவதாக தெரியவில்லை. எனவே, வரும் இடைத்தேர்தலில் திமுகவை நன்றாக வைத்து வெளுத்துவிடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பாட்டுப்பாடி விமர்சனம்: கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘பாட்டிலுக்கு 10 ரூபா..’’ என்று செந்தில் பாலாஜியை கிண்டல் செய்து விஜய் பாட்டு பாடினார். அதேபோல் நேற்றைய நிகழ்ச்சியிலும், செந்தில் பாலாஜியை ‘கரூர் கம்பெனி’ என்று விமர்சனம் செய்ததுடன், அவர் வழக்கில் ஆஜராகாமல் இருப்பதை கிண்டல் செய்யும் வகையில் ‘‘ஓடு.. ஓடு... வர்றான் பாரு வேட்டைக்காரன்’’ என்ற அவர் நடித்த திரைப்படத்தின் பாடலை பாடினார்.

அடுத்ததாக, ‘‘மற்றொருவர் வெளிநாட்டுக்கே சென்றுவிட்டார்’’ என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதை விமர்சனம் செய்தார்.

<div class="paragraphs"><p>கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வரும், தவெக தலைவருமான விஜய். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்றவர்களின் ஒரு பகுதியினர்.						               படங்கள்: ர.செல்வமுத்துகுமார்</p></div>
இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை: பூகம்ப அபாயம் குறித்து சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in