ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகவில்லை

சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதாக வழக்கறிஞர்கள் மனு
ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகவில்லை
Updated on
2 min read

சென்னை: சாலையே அமைக்காமல் ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆஜராகவில்லை.

கடந்த 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவி வகித்தார். 2022-ம் ஆண்டில், கரூரில் சாலையே அமைக்காமல் ரூ.3.23 கோடி பெற்று முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் தனியார் இயக்கம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் இந்தப் புகார் மனு மீது எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, இந்த ஊழல் புகார் தூசு தட்டப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த விவகாரத்தில் தீவிரப் புலனாய்வு மேற்கொண்டு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை முதல் குற்றவாளியாகச் சேர்த்து, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், கணக்காளர்கள் மற்றும் கரூரைச் சேர்ந்த 'சங்கரானந்த் இன்ப்ரா' ஒப்பந்த நிறுவனம் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 25-ம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, திருவண்ணாமலையில் உள்ள அவரது கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடு, கரூர், திண்டுக்கல், கோவை என 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது, முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்குக்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்ட தாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எ.வ. வேலுவிடம் நேரில் விசாரணை நடத்த சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூலை 3) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என எ.வ.வேலுவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால், நேற்று எ.வ.வேலு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் குழுவினர் ஆலந்தூர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ‘‘முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள் ளார். இதற்காக அவர், சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெறுவதற்காக ஜூன் 26-ம் தேதி சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

அவர் தற்போது வெளிநாட்டில் சிகிச்சையில் இருப்பதால், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் நேரில் ஆஜராக 10 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும்.

சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியவுடன் அவர் தமிழகம் திரும்பி, போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இந்த விளக்கத்தை ஏற்று அவருக்கு காலஅவகாசம் வழங்குவதா? அல்லது அடுத்தகட்டமாக புதிய சம்மன் அனுப்புவதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகவில்லை
அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீட்டை ஏற்க முடியாது: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in