

கு.லிங்கமுத்து
வேலூர்: குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கு.லிங்கமுத்து (73) வயதுமூப்பு காரணமாக நேற்று காலமானார்.
இவர் குடியாத்தம் தொகுதியில் 2011 முதல் 2016 வரை எம்எல்ஏ-வாக பதவி வகித்தார். அவரது உடல் செட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த லிங்கமுத்து, 1976 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். 1986 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் செட்டிக்குப்பம் ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். 1996-ல் மீண்டும் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.
2011-ல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குடியாத்தம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2016-ல் மக்கள் நலக் கூட்டணி சார்பில் குடியாத்தம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பதவியில் இருந்த லிங்கமுத்துவுக்கு, மனைவி லதா, மகள் முத்தமிழ், மகன் நிறைமதி செல்வன் உள்ளனர். அவரது உடல் இன்று (பிப். 7) பிற்பகல் 2 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.