

புதுச்சேரி: “எப்ப இலாகா ஒதுக்கப் போறாங்க?” என பாஜக அமைச்சரிடம் புதுவை முன்னாள் முதல்வர் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமனின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜானகி ராமன் உருவப் படத்திற்கு மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸார் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அமைச்சர் ஜான் குமாரும் அங்கு வந்து மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது கழுத்தில் பாஜக துண்டு இல்லாமல் வந்த அவரைப் பார்த்து “எப்ப இலாகா ஒதுக்கப் போறாங்க?” என நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜான்குமார், “கொடுத்தால் 2 நாளில் ராஜினாமா செய்து விடுவேன். ஆதலால் இலாகா ஒதுக்கவில்லை” என சிரித்தபடி பதில் கூறினார்.
“மில்களை திறப்போம்..வேலை கொடுப்போம். என்று கூறினீர்கள்..? அந்த வீடியோ என்னிடம் இருக்கு அதை காட்டித்தான் வர தேர்தலில் ஓட்டு கேட்க இருக்கிறோம்.” என நாராயணசாமி கூறினார். “போட்டியே உங்களுக்கும் எங்களுக்கும் தான்.” என ஜான் குமார் கூறி புறப்பட, சுற்றி இருந்த அனைவரும் சிரித்துள்ளனர்.