

படம்: ம.பிரபு
சென்னை: ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள் இருப்பது அவசியம் என்று முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்தார்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பவள விழா அதன் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: இறையன்பு: ஒரு நல்ல பதிப்பகம் என்பது புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்வதுடன் தனது பணியை முடித்துக்கொள்ளக் கூடாது. சமூகத்துக்கு ஏற்றதா, வாசகர்களுக்குப் பயனளிக்குமா, காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறதா என்பதை ஆராய்ந்து புத்தகங்களை வெளியிட வேண்டும். வாசகர்களின் வாசிப்பு ஆர்வத்தை மேம்படுத்தும் நூல்களை வெளியிடுவதே நல்ல பதிப்பகத்தின் அடையாளம். புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் கருத்துகளையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் பணியையும் பதிப்பாளர்கள் மேற்கொள்கின்றனர்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது. புத்தகங்கள் என்பது வெறும் வாசிப்புப் பழக்கத்துக்கானவை மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அறிவுச் செல்வமாகும். புத்தகங்கள் இல்லாமல் மனித வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்: புத்தகங்களை வெளியிடுவது என்பது வெறும் வணிக நடவடிக்கை அல்ல. சமூக மாற்றத்துக்கான சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியாகும். உலகளாவிய விடுதலைச் சிந்தனைகள், சிறிய நூல்கள், பெரிய நூல்கள் எனப் பல்வேறு படைப்புகளைத் தமிழில் வெளியிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
பபாசி தலைவர் சண்முகம்: பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் இணைந்து செயல்படும்போதுதான் புத்தக உலகம் மேலும் வளர்ச்சியடையும். எனவே, புத்தகத் திருவிழாக்கள் மூலம் வாசிப்புப் பழக்கத்தையும் தமிழ்ப் பண்பாட்டையும் வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் இயக்குநர்களான சுப்பராயன் எம்.பி., இரா.முத்தரசன், பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.