

முன்னாள் எம்எல்ஏ-வுமான சுதர்சனம் கொலை வழக்கில், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக். | படங்கள்: ம.பிரபு |
சென்னை: 20 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ-வுமான சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 3 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் சிறிதுகாலம் அமைச்சராகப் பதவி வகித்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சுதர்சனம், பெரியபாளையம் அருகே உள்ள தானாக்குளத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள ஜெயில்தார்சிங்
கடந்த 2005 ஜன.9 அன்று நள்ளிரவில் இவரது வீட்டுக்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள் சுதர்சனத்தை சுட்டுக்கொலைசெய்துவிட்டு, வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.
அதையடுத்து இந்த கும்பலை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதையடுத்து ஐஜி ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப்படை உருவாக்கப்பட்டு, பவாரியா கொள்ளையர்களான ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக், ஜெயில்தார் சிங் மற்றும் 3 பெண்கள் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தீர்ப்பை அறிய நீதிமன்றத்துக்கு வந்த முன்னாள் ஐஜி ஜாங்கிட், சுதர்சனத்தின் மகன் விஜயகுமார்.
84 பேர் சாட்சியம்: புழல் சிறையில் இருந்த ஓம் பிரகாஷ் உள்ளி்ட்ட இருவர், வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 3 பெண்கள் தலை மறைவாகினர். எஞ்சிய ஜெகதீஷ் உள்ளி்ட்ட 4 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையி்ல் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஜி.சீனிவாசன், மகாராஜன் ஆஜராகி வாதிட்டனர். 84 பேர் சாட்சியம் அளித்தனர். 100-க்கும் மேற்பட்ட சான்றாவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதேபோல குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆபிரகாம் லிங்கன், இந்த வழக்கில் கைதாகி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வரும் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
இவர்களுக்கான தீர்ப்பு விவரம் நவ.24 அன்று அறிவிக்கப்படும் என நீதிபதிஅறிவித்தார். அதேபோல இந்த வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனி்ல் வெளியே உள்ள ஜெயில்தார் சிங்கும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மீதான தீர்ப்பும் நவ.24 அன்று அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கை விசாரி்த்து குற்றவாளிளை வடமாநிலங்களுக்குச் சென்று துணிச்சலாக பிடித்துவந்த முன்னாள் ஐஜி ஜாங்கிட் உள்ளிட்ட முன்னாள் போலீஸ் அதிகாரிகளும் தீர்ப்பைக்காண நேற்று நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.
அதேபோல இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுட்டுக் கொல்லப்பட்ட சுதர்சனத்தின் மகன் விஜயகுமாரும் நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அவர், ‘குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் வடமாநில கொள்ளை யர்கள் தமிழகத்தில் தங்களது கைவரிசையைக் காட்டத் தயங் குவர்’ என்றார்.