

சென்னை: விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த வடமாநில இளைஞர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அவர் உள்ளாடைகளுக்குள் ரூ.1.80 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.