

சென்னை: தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற இணை தலைமை இயக்குநரான எம்.நம்பிராஜன் தலைமையில் 14 பேர் அடங்கிய தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் குறித்தும், கோயிலின் பழமை மற்றும் புராதன சின்னங்களை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட புராதன சின்னங்கள் ஆணைய சட்டத்தின்கீழ் தமிழ்நாடு புராதன சின்னங்கள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க ஏற்படும் காலதாமதம் குறித்தும் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை தலைமை இயக்குநர் எம். நம்பிராஜன் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு இன்று (ஜூலை 16) உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இந்த ஆணையம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் நான்காவது பிரகாரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பக்தர்களுக்கான காத்திருப்போர் கூடத்தை ஆய்வு செய்து ஜூலை 29-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்கு வெளியே மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமானங்கள் குறித்த திட்டங்களை புராதன ஆணையத்தின் ஒப்புதலை பெற்று தொடரலாம்.
கிரிவலப் பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் திடீரென முளைக்கும் தற்காலிக கடைகள் மற்றும் சன்னியாசிகளால் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் களைய மாவட்ட எஸ்பியுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சன்னியாசிகள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையடிவாரத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது உட்பட இந்த வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 30-க்கு தள்ளி வைத்துள்ளனர்.