

சென்னை: காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவது மக்களின் சேமிப்புகளுக்கு ஆபத்து என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய காப்பீட்டுத் துறையை பன்னாட்டு மூலதனத்துக்கு முழுமையாக திறந்துவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்டகால நிர்பந்தம். அதற்கு அடிபணியும் வகையில் காப்பீட்டுத் துறை தனியார் நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் அமைச்சரவை முடிவு கண்டனத்துக்குரியது.
1990-களில் சுதேசி பேசி,இன்று தேசியம் என்று எதற்கெடுத்தாலும் முழங்குபவர்கள் அந்நிய முதலீட்டுக்கு காட்டியுள்ள தாராளம் வெட்கக்கேடானது. ஆயுள் காப்பீடு என்பது நீண்டகால முதலீடு. இதில் உள்ளே வந்த அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் பல தற்போது திவாலாகிவிட்ட நிலையில், அரசு நிறுவனமான எல்ஐசியின் பாலிசிதாரர் உரிமப் பட்டுவாடா சதவீதம் 99 இருப்பது அதன் சேவைக்கு சான்றாகும்.
இதை சீர்குலைக்க செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. 100 சதவீத அனுமதி தந்தால் உள்நாட்டு சேமிப்புகளும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் காப்பீடும் சமூக பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். எனவே காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்.