புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்ட 80,000 பேருக்கு தயாரான உணவு; ஆட்சியர் ஆய்வு!
புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்டோருக்கு சுகாதாரமான உணவைத் தரும் வகையில், 80 ஆயிரம் பேருக்கு லாஸ்பேட்டையில் உள்ள உணவுக் கூடத்தில் உணவு தயாரித்து இன்று விநியோகத்துக்கு அனுப்பப்பட்டது.
டிட்வா புயல் காரணமாக புதுவையில் 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அவர்களுக்கு உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் தங்குவதற்கான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, லாஸ்பேட்டையில் அமைந்துள்ள அட்சய பாத்திரா உணவு தயாரிக்கும் கூடத்தை இன்று ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு 80 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிப்பதை பார்வையிட்ட ஆட்சியர் உணவின் தரத்தையும் சோதித்து பார்த்தார்.
புதுவையில் உள்ள அனைத்து பாதுகாப்பு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் உணவு எடுத்துச் செல்லுமாறும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு பரிமாற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மதிய வேளைக்கு அந்த உணவை விநியோகிக்கும் வகையில் அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் நடந்தன. முகாமில் உள்ளோருக்கு சுத்தமான குடிநீர் உள்ளிட்டவைகளையும் வழங்குமாறும் அறிவுறுத்தினார்.
இதன் தொடர் நிகழ்வாக ஆட்சியர், லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மாருதி பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு உணவு பரிமாறுவதை ஆய்வு செய்தார். அவர்களிடம் சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா எனக் கேட்டறிந்தார்.
