

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 37 நாட்களாக நடைபெற்றுவந்த இடைநிலை ஆசிரியர் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதரற்காக பல்வேறுகட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இக்கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் கடந்த டிச.26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர் ஆகியோருடன் 2 முறை நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அதேபோல், போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தது. எனினும், ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஊதியத்தை தமிழக அரசு நிறுத்திவைத்தது. அதேநேரம் தொடர்ந்து 37-வது நாளாக சென்னை டிபிஐ வளாகம் முன் நேற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப் பிரச்சினை குறித்து முடிவு எடுக்கப்படும். போராட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பள்ளிக்குத் திரும்பி கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து போராட்டங்களில் ஈடுபடாமல் மாணவர்கள் நலன்கருதி பள்ளிக்கு தொடர்ந்து சென்று கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். மேலும், மொத்தமுள்ள இடைநிலை ஆசிரியர்களில் பணிகளுக்குச் செல்லாமல் இருக்கின்ற 5,781 ஆசிரியர்களையும் கற்பித்தல் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து எஸ்எஸ்டிஏ பொதுச்செயலர் ஜெ.ராபர்ட் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமைச்சர் கோரிக்கையை ஏற்றும், தமிழக அரசு மற்றும் முதல்வர் மீது நம்பிக்கை வைத்தும், மாணவர்கள் கல்வி நலன், நெடுநாட்களாகப் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல்நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில்வெகு சிறப்பாக ஈடுபடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.