

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு, கேரளா மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (பிப்.1) ஓரிரு இடங்களிலும், 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 3-ம் தேதி கடலோர மாவட்டங்களிலும், 4-ம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும், 5-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 6-ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டமும் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். வரும் 2, 3, 4-ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 செல்சியஸ் அளவில் இருக்கும்.
தமிழகத்தில் ஜன. 31-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 16.5 டிகிரி செல்சியஸ், மலைப் பகுதியான ஊட்டியில் 6.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.