

சென்னை: கட்டுமான நிறுவன உரிமையாளர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே கொளத்தூர் ராமதாஸ் நகரில் தேமுதிக எம்.பி. சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான 2 ஏக்கர் 10 சென்ட் நிலத்தில் 234 அடுக்குமாடி வீடுகளை கட்டி, அதில் 78 வீடுகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால், சந்தோஷ் சர்மா போலியாக கையெழுத்திட்டு அந்த 78 வீடுகளை ரூ.43 கோடிக்கு விற்பனை செய்து தங்களை மோசடி செய்ததாக சுதீஷ் தரப்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இதன்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான சந்தோஷ் சர்மா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வீடுகளை வாங்கியவர்களிடம் அவற்றை ஒப்படைக்காமல் ஏமாற்றி விட்டதாக கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சந்தோஷ் சர்மாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்குமாறு கடந்த 2025 செப்.22-ம் தேதி அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ‘கடந்த 2019-2023 காலகட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக 2 ஆண்டுகள் தாமதமாக 2025-ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் எனது தந்தையை சிறையில் அடைத்துள்ளனர்.
சுதீஷ் தரப்பில் அளித்த புகாரில் ஏற்கெனவே ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் அதே விவகாரத்துக்காக வீடுகளை வாங்கிய உரிமையாளர்களிடம் புகார் பெற்று மீண்டும் 2 வழக்குகளை பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது சட்ட விரோதம்.
எனவே, அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார். இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது கணவருக்கு 4 வாரம் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சந்தோஷ் சர்மாவின் மனைவி கல்பனா இடைக்கால மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘குண்டர் தடுப்புச் சட்டத்தை எதற்கு உபயோகிப்பது என்பது ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா? சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் அடுத்த வாரம் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.